கோட்டைக்கல்லாறு  கிராமத்தின் ஒட்டுமொத்த  வளர்ச்சியில் துரித முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில்,  பிரித்தானியா   கோட்டைக்கல்லாறு ஒன்றிய நிருவாக கூட்டத்தில், எமது கிராமத்தின்   நீண்ட கால பிரச்சனையான பொது மயானம் தொடர்பாக, எமது மண்ணின்  மூத்த பொறியியலாளருள் ஒருவரும், சிறந்த சமூக சேவகருமான  திரு நா.பஞ்சாட்சரம் அவர்களினால் இப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி  வைக்கும்  நிமித்தம், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட  நடைமுறை சாத்தியமான  முன்மொழிவுகள் அடங்கிய பிரேரணையொன்று    சமர்ப்பிக்கப்பட்டது. 

இப் பிரேரணையில் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களில்  மிகச் சிறந்த தெரிவினை எமது கிராமத்து மக்களின் ஏகோபித்த சம்மதத்துடனும்,  சகல நாடுகளிலும் பரந்து வாழுகின்ற  எம்  உறவுகளின்  பங்களிப்புடனும்  விரைவில் நடைமுறைப்படுத்த  மேற்படி ஒன்றிய  நிருவாகம் தீர்மானம் எடுத்துள்ளது.

உறவுகளே!!!
மயானம் என்பது எம்முடன் உணர்வு ரீதியாக ஒன்றி உறவாடிய ஆத்மாக்கள் உறங்கும் இடம்!! 
எம்மை பெற்றுவளர்த்த பெற்றோர்,உடன் பிறப்புக்கள் மற்றும் எம் உறவுகள் இறுதியில் சங்கமிக்கும் இடம் !!

எனவே எமது கோட்டைக்கல்லாறு அனைத்து உறவுகளுக்கும் எங்கள் பணிவானதும்,  ஆத்மீகமானதுமானவேண்டுகோள்  ஒன்றினை மேற்படி ஒன்றிய நிருவாகத்தின் சார்பில் முன் வைக்கின்றோம்.



நடைமுறை சாத்தியமான உங்கள் தெரிவினை எமது இணைய தளத்தின் முகப்பிலுள்ள இணைய வாக்குப் பதிவினூடகவோ அல்லது கோட்டைக்கல்லாறு  இன்போ  முகப்புத்தக பக்கத்தில் உள்ள  வாக்குப் பதிவினூடகவோ செலுத்தவும் மற்றும்  உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் கோட்டைக்கல்லாறு இன்போ இணையதளத்தில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

Eng.நா. பஞ்சாட்சரம் அவர்களினால் வழங்கப்பட்ட பிரேரணை 




கோட்டைக்கல்லாறு பொது மயானம் 

ஒரு தொழில்நுட்ப  முன்னோக்குப் பார்வையில் தீர்வுக்கான திட்டங்களும் மற்றும் பரிந்துரைகளும் 





இந்த தொழில்நுட்பக் குறிப்பின்  நோக்கம்

எமது ஊர் மயானம் தொன்று தொட்டு பாவனையில் உள்ளதால் தற்போது இடப்பற்றாக்குறை  மிகப்பெரிய  பிரச்சனையாக உள்ளது 
தற்போது இம்மயானத்தின் ஒரு பகுதி விளையாட்டு மைதானமாக பாவிக்கப்படுகிறது .ஆனாலும் இம் மைதானப் பகுதி ஏற்கனவே பிரேதங்கள் மிக நெருக்கமாக புதைக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால் விளையாட்டு மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்றினாலும் நாம் வேறு தீர்வுகள் காணாவிடின் மயான இடப்பற்றாக்குறை தொடர்ந்து கொண்டே இருக்கும் 

இந்த மயான இடப்பற்றாக்குறையைப் போக்க சாத்தியமான தீர்வுகளை ஆராய்ந்து பொருத்தமான தீர்வுத்திட்டத்தை  இந்த தொழில்நுட்பக்குறிப்பு மூலம் ஊர் மக்களின் பார்வைக்கு விடுகிறேன்
மயான இடப்பற்றாக்குறையை போக்க சாத்தியமான நடவடிக்கையை எடுப்பது ஊர் மக்களாகிய நமது கடமையாகும் .இது எமது ஊரின் முக்கிய எதிர்கால தேவையுமாகும்.

தீர்வுத்திட்டம் 1

மயானத்தை கடற்கரைக்கு மாற்றுதல்


தீர்வுத்திட்டம் 1.1

படகு அல்லது மிதவை மூலம் ஓடையை கடத்தல்


தீர்வுத்திட்டம் 1.1 :  நன்மைகள்

* குறைந்த மூலதனம் . இயந்திரம் இணைக்கப்பட படகு எனின் மூலதனம்        இன்னும் அதிகமாக தேவைப்படலாம்

* அரச உதவியை நாடவேண்டி இருக்காது. எமது புலம் பெயர் உறவுகளின் உதவியுடன் இந்த பரிந்துரையை செயற்படுத்தலாம்

* நடைமுறைப்படுத்த எடுக்கும் காலம் குறைவாக இருக்கும்


தீர்வுத்திட்டம் 1.1 : தீமைகள்

* தொடர் பராமரிப்பு  செலவு  இருக்கும் .இயந்திரம் இணைக்கப்பட்ட படகு எனின் இந்த செலவு இன்னும் அதிகமாகும் .குறிப்பாக ஓடையின் உப்பு நீர்  இயந்திரத்தின் பராமரிப்பு செலவைக் கூட்டும் . மேலும் இயந்திரத்தின் வாழ்நாளையும் உப்பு நீர் குறைக்கும் .இதனால் புது இயந்திரம் வாங்க வேண்டிய தேவை தொடர்ந்து ஏற்படலாம் 

* காழ்ப்புணர்ச்சி மூலம் படகிற்கு அல்லது மிதவைக்கு சேதம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்

* படகு அல்லது மிதவை பாவிப்பு மக்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கலாம் குறிப்பாக இறுதி ஊர்வல நேரம் படகு அல்லது மிதவை மீதுள்ள அதிக சுமையால் ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் எனவே ஆபத்துக்களை இயன்றவரை தவிர்ப்பது நல்லது
படகு அல்லது மிதவை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றது (குறிப்பாக இரவு நேரங்களில் )

தீர்வுத்திட்டம் 1.2


பாலம் மூலம் ஓடையை கடத்தல்



தீர்வுத்திட்டம் 1.2 : நன்மைகள்

* கடற்கரையையும் ஊரையும் இலகுவாக இணைக்கலாம் அதனால் ஊர் மக்கள் கடற்கரையில் குடியேறலாம்

* குடிநீர் வசதி மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை  பாலத்தினூடாக கொண்டுசெல்லலாம்

*   மக்களின் பொழுது போக்கிற்கு  கடற்கரையை பயன் படுத்தலாம்
  இது சில்லறை வியாபாரத்தை ஊக்குவிக்கும்



தீர்வுத்திட்டம் 1.2 : தீமைகள்

மூலதனம் மிக அதிகம் தேவைப்படும் (300 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாக தேவைப்படலாம் ).அரச இதவி கிடைப்பது மிக மிக அரிது. காரணம் கோட்டைக்கல்லாற்றிக்கு மாத்திரம் எல்லைப் படுத்தப்பட்ட பயன்பாட்டு நன்மைகள். இது தவிர ஒந்தாச்சிமடத்தினூடாக கடற்கரைக்கு வழி உள்ளதால் அரசிடம் இருந்து இத் திட்டத்திற்கு நிதி கிடைப்பது மிகமிக அரிது 
குறிப்பு : ஓடையை நிரப்பி பெரிய குழாய்கள் போட்டு பாலம் அமைப்பது செலவைக்குறைக்கும் .ஆனாலும் இவ் வகைப்பாலம் சுனாமி மற்றும்  வெள்ள காலங்களில் ஊரை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும்  மற்றும் தோணிகள் பாலத்தை கடக்க முடியாது எனவே இவ் வகையான  நீர்க் குழாய் பாலம் எமது ஊருக்கு பொருத்தமானதல்ல



தீர்வுத்திட்டம் 1-3



சடலத்தை ஒந்தாச்சிமடத்தினூடாக கொண்டு போய் கடற்கரையில் புதைத்தல் 

ஒந்தாச்சிமடத்து மக்கள் முன்பு தங்கள் ஊர் பாதை ஊடாக பாடையில் பிரேதம் கொண்டு போவதை விரும்பவில்லை  இனியும் விரும்புவார்கள் என்பது சந்தேகம் 

அரச  அதிகாரிகள் மூலமாக இதை ஒந்தாச்சிமடத்து மக்கள் ஆதரவுடன் நாம் செயற்படுத்தினாலும் புதிய மயானத்திற்கு கிட்டத்தட்ட ஊரின் மத்தியில் இருந்து 2 கிலோமீட்டர் 
(மொத்தம் 4  கிலோமீட்டர்  போவதற்கும் வருவதற்கும் ) 
நடக்க வேண்டி இருப்பதால் ஊர்மக்கள் பிரேத ஊர்வலத்திலும்  மற்றும் இறுதி கிரியையிலும் பங்கு கொள்ள தயக்கம் காட்டலாம்
எனவே இந்த திட்டத்தை  தவிர்ப்பது நல்லது 


தீர்வுத்திட்டம் 2

மண்ணால் நிரப்பப்பட்ட மயானம்


தீர்வுத்திட்டம் 2  நன்மைகள்


* மைதானமும் மானமும் ஒரே இடத்தில் இருந்தாலும் ஒரு பொது வேலியின் மூலம் பிரிக்கப்பட்டிருக்கும்

*மைதானத்திற்கு வேறாக  வழிப் பாதை  அமைப்பதால் மைதானத்தை கடக்க வேண்டியதேவை இருக்காது

* இரண்டும் ஊர் எல்லைக்குள் இருப்பதால் மானத்திற்காக ஓடையை கடக்க வேண்டியதில்லை
நிரப்பப்பட்ட மயானம் அண்ணளவாக 3000 சதுர மீட்டர் பரப்பளவு (200மீ X 15மீ) உடையதாக இருப்பதால் இது கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட சடலங்களை புதைக்க கூடியதாக இருக்கும்

* இது 100 வருடங்களுக்கு மேல் பாவிக்க போதுமானதாக இருக்கும்(அனுமானம்  வருடத்திற்கு 5 சடலம்)

தீர்வுத்திட்டம்  2  தீமைகள் 

* ஓடையின் அகலம் குறையும் . இதனால் வெள்ள காலத்தில் நீரோட்ட வேகம் மிகச் சொற்ப அளவு கூடும் ஆனால் இந்த வேகம் ஒந்தாச்சிமடத்து பாலத்தினூடாக போகும் நீரோட்ட வேகத்தைவிட  மிகக் குறைவுள்ளதாக இருக்கும் எனவே திகரித்த நீரோட்ட பாதிப்பு மிகக் குறைவாகும்

* இந்த திட்டத்திற்கான மொத்த செலவீனம் கிட்டத்தட்ட 60 மில்லியன் ரூபா என மதிப்பிடப் படுகின்றது  அதனனல் இதை இலங்கை அரச உதவியுடனேயே நடைமுறைப்படுத்த வேண்டி வரும்  இதற்காக பிரதேச சபை , மாவட்ட செயலாளர் அனுமதி பெற்ற பின்பு , நமது பாராளுமன்ற உறுப்பினர்  மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மூலம் அரசை அணுகி அழுத்தம் கொடுத்து நிதியுதவி பெறலாம்.

* சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு மற்றும் திட்ட அறிக்கைகள் அரச அனுமதிக்கு தேவைப்படுவதால் மேலும் அரச நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டி உள்ளதால் தீர்வுத்திட்டத்தை  செயற்படுத்த சிலகாலம் எடுக்கும்






 
உங்கள் வாக்குகளை பதிய கீழுள்ள தெரிவில், தெரிவு செய்து VOTE என்பதை அழுத்தவும். 









 
Top