
„விழுதல் என்பது எழுகையே“
(நிறைவுப் பகுதி 1, எழுதியவர்: திருமதி.தேனம்மை லக்ஸ்மணன், இந்தியா)
தொடர்கிறது...
பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்பீழை இருக்குதடி தங்கமே. என்று பாரதியார் பாடியது சும்மாவா.
பத்மகலாவின் வருகைக்காக சீலன் பிராங்போர்ட் ஏர்போர்ட்டில் வெளியேறுவார் கதவிற்கு முன்னால் படபடப்புடன் காத்திருந்தான். விமானத்தை விட்டிறங்கி பாஸ்போட் பரிசோதனை முடிந்து வெளியே வரும் கதவுக்கூடாக ஒவ்வொரு பயணியும் வரும் போதும் கதவு திறப்பதும் வருவது பத்மகலாவா என ஆவலுடன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
சில விநாடி இடைவெளிகளுக்குள் மூடித்திறக்கும் கதவிடுக்குள் ஊடாக பத்மகலாவின் உருவம் தெரிகிறதா என அவனின் கண்கள் தேடின.
இதோ ப்ராங்க்ஃபர்ட் ஏர்ப்போர்ட்டில் பீடு நடைபோட்டு தன்னருகே வரும் பத்மகலாவைப் பார்த்துப் பெருமிதமாக இருந்தது சீலனுக்கு.
சீலன் தனக்காக ஒற்றைச் சிவப்பு ரோஜாவுடன் கண்களில் அவலும் பரசவமும் மின்ன காத்திருப்பதைக் கண்டதும் அவனை நோக்கி வேகமாக நடந்து வர அவனும் அவளை நோக்கி நடந்தான்.
சில விநாடிகள்தான், தாயிடம் சேய் பாய்ந்து சென்று அணைத்துக் கொள்வது போல் இருவரும் ஒருவரை அணைத்துக் கொண்டனர்.
பத்மகலா சீலனின் தோள்மீது சாயந்து அவனை இறுக்கி அணைத்தவாறு குலுங்கி குலுங்கி அழுது ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள்.
அவளின் கண்ணீர் சீலனின் சேர்ட்டையையும் பனியனையும் தாண்டி அவனின் முதுகைச் சுட்டது. சீலன் அவள் முதுகை ஆதரவாக வருடியவாறு தனது கண்களையும் துடைத்துக் கொண்டான்.
„சீலன் உன்னோடு சேருவேன் என எதிர்பார்க்கவேயில்லை“
குலுங்கி குலுங்கி அழுதாள்.அது காதலில் தோய்ந்து வந்த அழுகை.
அவர்கள் இருவரும் பொது இடம் என்றும் கவனிக்காது அணைத்துக் கொண்டு நின்றதை வெள்ளைக்காரர்கள் வியப்புடன் பார்த்தார்கள். ஏனென்றால் தமிழ்க் காதலர்கள் பொது இடங்களில் கட்டிப்பிடித்து அணைப்பது அரிது அதனால் அவர்கள் வியப்புடன் பார்த்தார்கள் சிலர் அவர்களிருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே சென்றார்கள்.
அணைப்பிலிருந்து விடுபட்டனர் இருவரும்.
சீலன் தனது காதலியை அழைத்துச் சென்று வாங்கொன்றில் உட்கார வைத்துவிட்டு „இருங்கோ இங்கே ஒரு கோப்பி குடிச்சுப் போட்டுப் போவோம் என்றான் சீலன். அதனருகே ஒரு மக்டொனால்ட்ஸ் கடை இருந்தது. இருங்கோ வாரேன் என்று ஸ்டார்பக்ஸ் காஃபியை வாங்கிக் கொண்டு மக்டொனால்ட்ஸில் இரண்டு பர்கர் ஆர்டர் செய்து எடுத்துவந்தான்.
முன்சனுக்கு செல்லும் புகையிரதத்தில் திரும்பி வீட்டிற்கு வரும்போது சுடச் சுட பர்கரும் காஃபியும் சாப்பிட்டபடி வந்தார்கள். அவனது நெடுநாளைக்கு முன்னான கனவு ஞாபகம் வந்தது. குழந்தைத்தனமான கனவு.. பத்மகலாவுடன் பர்கரும் ஐஸ்க்ரீமும் சாப்பிடுவதான கனவு. அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அது விரைவுப் புகையிரதம், பெரிதாகப் பயணிகள் இல்லை. பத்மகலா அவனின் தோளில் சாய்வதும் தலைநிமிர்த்தி பர்கரை சாப்பிடுவதும் கோப்பி குடிப்பதும் பிறகு தோளில் சாய்வதுமாக இருந்தாள்.
கனடாவிலிருந்து புறப்படும் போது தலைக்குத் தேய்த்துக் குளித்த சாம்பூவின் வாசனையும் அவளின் உடலிலிருந்த வாசனையும் அவனைக் கிறங்கடித்தது.
அவனை அவள் உற்று என்ன என்பது போல் பார்த்த அவள் கண்கள் கலங்கி இருந்தன. பதறிவிட்டான் சீலன். முன்பு எப்போதோ கோபித்ததை நினைத்து அழுகிறாளோ. இல்லை அவள் பட்டென்று போட்டுடைத்தாள். அவனுடன் இனி சேர்வோமோ என்ற நிலையிலிருந்து இன்று கண்டடைந்த நிலை வரை அவள் மனக்கண்ணில் ஓடி இருந்தது.
„சீலன்.. சீலன் என்று குழந்தை போலத் தேம்பியபடி. இந்தப் பொறாமைதான் எவ்வளவு பெரிய விடயம்;..பானு அக்காவைப் போய் சந்தேகப்பட்டேனே மன்னிச்சிருங்கோ“ என்றாள்.
„அதெல்லாம் விடு.. உன் மனக்குழப்பம் அப்பிடிப் பேச வைத்தது. ஆனால் நீ கொடுத்து வைத்தவள் கலா. நம்மட பெண்கள் இங்கே படும் பாட்டை அறிந்தால் வருந்துவாய். நீ பாக்யசாலி என்பேன“;.
”என் அம்மா. என் அம்மாவைப்போல எத்தனை அம்மாக்கள். தங்கட குஞ்சுகளை வெளிநாட்டுக்கு அனுப்புவித்து தப்பிச்சு வாழ்ந்தா போதுமெண்டு தங்கள் சொத்துசுகம் எல்லாத்தையும் வித்து தியாகியாக் கிடக்குறாங்க. தன் ரத்தத்தைப் பாலாக் கொடுத்து தன் சேமிப்பையும் வழிச்சுக் கொடுத்து என்னென்ன துயரத்தோட வாழ்ந்து வர்றாங்க. படிப்பு ஒண்டே தன்னை உயர்த்தும் என்று படிக்க வந்து பணத்தட்டுப்பாடாலும் உடல் நிலையாலும் பாதிப்படிப்போடு கல்யாணம் கட்டிப்போன என் தங்கச்சி, இங்கே தங்கட தாய்நாட்டை விட்டுத் தனியா உபத்ரவம் செய்யும், சந்தேக குணம் கொண்ட புருசனோட சின்னஞ்சிறு பிள்ளைகளோடும் ஊர் ஏக்கத்துல வாழ்ந்து வர்ற பானு அக்கா, குடிப்பழக்கத்தாலயும் மற்ற பழக்கங்களாலயும் புருஷன் அழைக்காம இருந்தாலும் வந்து அவனுக்குப் பணிவிடை செஞ்சு அவனுக்குப் பின்னே அநாதரவா ஆன பிரான்சில் வாழும் கமலா அக்கா, அடுத்தவங்களுக்கு உதவி வர்ற வவா அன்ரி, டேவிட் அங்கிள் மனைவி, தன்னோட வாழ்க்கையை தந்தைக்குப் பயந்து ஒளிச்சு பின்னே ஓடிப்போய்த் திருமணம் செய்த நிரோஜா.. ஹ்ம்ம் பெண்களுக்கு எங்கேயும் அதிகாரம் இல்லை. முடிவெடுக்க முடிவதில்லை. .”
உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் பேசிக்கொண்டிருந்தான் சீலன். மனம் கட்டறுந்த நிலை.. ”இன்னும் சிலபேரைப் பத்திச் சொன்னா உன் மனசு துடிக்கும் கலா .. என்னைத் தன் சகோதரனாய் வரிச்ச சாந்தி தன்னோட கணவனைக் காண பூஜைக்கு வந்த புஸ்பம் போல இருந்தா. ஆனா இந்த கண்டம் விட்டுக் கண்டம் மாறும் வித்தையில விசாவுக்கு ஏற்பாடு செய்த ஒரு காடையனால தன்னோட உடல் மாசடைஞ்சிருச்சின்னு சொல்லி ஏழாவது மாடிலேருந்து உயிர்துறந்த சாந்தி.. அதை விடக் கொடுமை. நல்ல சீர் செனத்தியோட அப்பா அம்மா கட்டி வைச்ச பவித்ரா அக்கா இங்கே இப்போ என்று சொல்லும்போது குலுங்கிக் குலுங்கி அழுதுவிட்டான்”.
பதறிப்போன கலா.. ”சீலன் சீலன்.. என்னாச்சு ? “ என்றாள். அவங்க காரியம் முடிஞ்சு போச்சுன்னு அங்கே அவங்க அப்பா அம்மா எல்லாம் கர்மா பண்ணிட்டாங்க. ஆனா அவங்க இங்கே இங்கே ஒரு சீரழிவைச் சந்திச்சு இப்போ அதிலிருந்து மீள முடியாம இருக்காங்க.. பெண்களை போகப் பொருளா உலகமெங்கும் பயன்படுத்துறாங்க. அதுக்கு ஜெர்மனியும் விதி விலக்கில்ல. ஐரோப்பாவோட மையமா இது திகழுதுன்னு சொல்றாங்க.
திருமணம் செய்து கூட்டி வந்து புருசனால கைவிடப்பட்டவங்க., கள்ளவிசாவில வந்தவங்க தாங்கள் ஜீவிக்க வேண்டி ஒரு வேலை தேடிப் போகும்போதும் அந்த அலுவலகங்கள்ல பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகுறாங்க. யாதும் ஊரே யாவரும் கேளீர்னு இதுல ஈடுபட்டவங்க போதை அடிமையாவும் ஆகிடுறாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு நாம் ஏதும் உதவி செய்யணும் கலா என்றான்.” அவனுடைய நெகிழ்வும் தீவிரமும் அவளிடமும் தொற்றிக் கொண்டது.
இந்தப் பேப்பரைப் பார். இதுல அடுத்த கிழமை பிராங்பேர்ட்டிலபெண்களுக்கு நேரும் குடும்ப வன்கொடுமைகள் குறித்தும் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்தும் பேரணி நடக்க இருக்கு. அந்தப் பேரணியும் கருத்தரங்கும் அனைத்துலகப் பெண்கள் அமைப்பினால் நடத்தப்படவிருக்கின்றது.
உலக நாடுகள் அனைத்திலுமிருந்து அந்ததந்த நாடுகளிலிரக்கம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள்அ கலந்து கொள்ளுகிறார்கள்.
அதன் முடிவுல நடக்கப் போற கருத்தரங்கத்துல மதுரைப் பல்கலைக்கழக பேராசிரியை மங்கையர்க்கரசியாரும், டென்மார்க்கிலிருக்கும் பேராசிரியர்; குமாரவேலுவும் அவர்களும் பேசுறாகிறார்கள். ஜேர்மனிய பெண்கள் அமைப்பு அவர்களை அழைத்திருக்கிறார்கள்.
„அவர்கள் இருவரும் உன்னுடன் தொடர்பு கொண்டார்களா“
„ஓம் நான் அவர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர்கள் வருவதாகச் சொன்னார்கள். அவர்களிருவரும் பிராங்பேர்ட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கப் போகிறார்கள். அவர்களுக்கான செலவை ஜேர்மனிய பெண்கள் அமைப்பு பொறுப்பேற்றுளளது“
„அது சரி கலா நீ இங்கை என்ன படிக்கப் போகிறாய் கனடாவிலை மூன்று மாதம் டொக்ரருக்குப் படித்தாயே“
„பெண்ணியம் சம்பந்தப்பட்ட படிப்பையும் ஜேர்னலிசமும் படிக்கப் போகிறன் „
„அப்ப டொக்ரர் படிப்பு“
„அதைவிட எனக்கு இதிலைதான் விருப்பம். படிப்புக்கு எல்லையும் இல்லை வயதும் இல்லை. யோசிப்பம்“என்றாள் பத்மகலா.
„அருமையான முடிவு. கனடாவிலை பெண்களுக்கான டொக்ரர் படிப்பை படித்தனி. அதை இங்கை தொடர முடியும். பெண்ணியம் சம்பந்தப்பட்ட படிப்பையும் ஜேர்சனலிசத்தையம் படித்தாள் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதாயும் இருக்கின்றது, இது முடியுமா உன்னால்....“ என்று வாய் மூடமுன்,
„முடியும் சாதித்துக் காட்டிறன்“ என்றாள் உறுதியாக.
புகையிரதத்தில் பேசியபடியே வந்த பத்மகலா சீலனின் தோளில் தூங்கிவிட்டாள். முன்சன் புகையிரத நிலையத்தை புகையிரதம் வந்தடைந்தது.
தனது தோளில் தலைசாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்த பத்மகலாவின் தலையை மெதுவாகத் தூக்கிய சீலன் „கலா நாங்கள் இறங்க வேண்டிய ஸ்ரேசன் வந்துவிட்டது, இறங்குவம்“ என அவளை எழுப்புகிறான்.
புகையிரதத்தை விட்டு முதலில் இறங்கிய பத்மகலா, கனடாவிலிருந்து கொண்டுவந்து சூட்கேசை சீலனிடமிருந்து வாங்குகிறாள்.
„கலா இனி வீட்டை போய் சமைக்க ஏலாது, இங்கேயே உருளைக்கிழங்கு பொரியலை வாங்கிக் கொண்டு போய் வீட்டிலை வைத்துச் சாப்பிடுவம் „ என்ற சொல்லியவாறு பத்மகலாவை அழைத்துக் கொண்டு புகையிரத நிலையத்திற்க எதிரேயிருந்த உணவு விடுதியில் உருளைக்கிழங்குப் பொரியலை பாரசல் செய்து வாங்குகிறான்.
பத்மகலா விமானப் பிரயாணம், புகையிரதப் பிரயாணம் என சோர்ந்து போயிருந்தாள்.தனது வீட்டுக்கு பஸ்ஸில் அவள் இருக்கும் கூட்டிக் கொண்டு போக முடியாது என புரிந்து கொண்ட சீலன் ராக்சியில் அவளைக் கூட்டிக் கொண்டு போனான்.
அவனது வீடு மாடியில் இருந்தது.
ஒரு கூடம் கூடத்தோடு திறந்த சமையலறை,ஒரு படுக்கையறை மலசலகூடம் இவ்வளவுதான் அவனது வீடு.
கூடத்திலிருந்த சோபாவில் இருவரும் அமர்ந்தார்கள். மேலே பார்த்தபடி இருந்த பத்மகலாவின் கண்களிலிருந்து மெல்லக் கண்ணீர் கசிந்தது.
சீலன் அவளை ஆதரவாக அணைத்தபடி „இப்ப எதற்கு அழுகிறாய்.......எதை நினைத்து அழுகிறாய்....அழாதை“என்கிறான்
அப்படியே அவன் மடியில் தலை வைத்தவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.
„முடியேலை சீலன் முடியேலை அழாமலிருக்க முடியேலை...சீலன் நான் கனடாவிலிருந்த போது உனக்கும் எனக்கும் இனிச் சரிவராது எனக்குச் சமனாக உன்னால் முடியாது என்று சொன்னேன். அதைக் கேட்ட நீ எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாய் என்பதை உணர்ந்தேன். அன்றிரவு நித்திரை இல்லாமல் அழுதேன். அக்காவிற்கும் அத்தானுக்கும் நான் இங்கு வருவதில் விருப்பம் இல்லை. ஆனால் பிடிவாதமாக இருந்தேன்.அவர்களுடன் தினம் தினம் வாக்குவாதப்படுவதால் ஏதோ கோபத்தில் அப்படிச் சொன்னேன். நீ எவ்வளவு நல்லவன். எதையும் மனதில் வைத்திருக்காமல் இருக்கிறாய். என்னை மன்னித்துவிடு சீலன்“ என அவனிடம் மன்னிப்புக் கேட்டாள்.
சீலன் அவளை ஒரு குழந்தையை மடியில் படுக்க வைத்து தலையை வருடிக் கொடுப்பது போல் அவளின் தலையை வருடிக் கொடுத்தபடியே „கலா அழுகையை நிறுத்து. நான் ஒன்றுமே நினைக்கேலை அழாதை „ அவளின் கண்ணீரைத் துடைத்துவிடுகிறான்.
கலா ஜேர்மனிக்கு வரப் போகிறாள் என்று அவள் சொன்னவுடன் சீலன் வீட்டுக்கு லாண்டலைன் தொலைபேசி இணைப்பை எற்படுத்தியிருந்தான்.
தாய்க்கும் சுவிஸிலிருந்த தவம்,டேவிட் அங்கிள், பானுவுக்கும் டென்மார்க்கில் ஆனந்தருக்கும் பேராசிரியர் குமாரவேலுவுக்கும் மதுரைப் பேராசிரியர் மங்கையற்கரசிக்கும் தனது தொலைபேசி இலக்கங்களைக் கொடுத்திருந்தான்.
நேற்று மங்கையற்கரசியும் குமாரவேலுவும் அடுத்த கிழமை பிராங்பேர்ட்டில் நடக்கவிருக்கும் சர்வதேசப் பெண்கள் பேரணியிலும் கரத்தரங்கிலும் கலந்து கொள்ள வருவதாக அறிவித்துவிட்டார்கள்.
முகம் கழுவிவிட்டு வருகிறேன் என பத்மகலா எழவும் தொலைபேசி மணி அடித்தது. பத்மகலா தொலைபேசியை எடுத்து „கலோ“ என குரல் கொடுக்க, மறுமுனையில் இரண்டு விநாடிகள் சத்தம் வரவில்லை.மறுபடியும் „கலோ“ என்கிறாள் கலா.
மறுமுனையில் „கலோ நான் பானு பேசுகிறன் சுவிஸிலிருந்து இது சீலனின் வீடுதானே......நீங்கள்....
„நான் பத்மகலா“ அவள் சொல்லி முடிக்குமுன்,
„பத்மகலாவா“ உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் பானுவின் குரல் தொலைபேசிக்கூடாக அதிர்கிறது. தொடர்ந்து பானு „எப்ப வந்தனீங்கள்“ என்கிறாள் பானு, „இன்றைக்குத்தான் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரந்தான் ஆகுது“ என பத்மகலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே சீலன் எழுந்து தொலைபேசியிலிருந்த ஒலிபெருக்கியை அமத்த மறுமுனையில் பானு „ எனக்கு சரியான சந்தோசம் பத்மகலா நீங்கள் சீலனுடன் வந்து சேர்ந்தது, சீலனுடன் பேசமுடியுமா என அவள் கேட்க“ சொல்லுங்கள் பானு அக்கா நான் கேட்டுக் கொண்டிருக்கிறன் „ எனச் சீலன் சொல்கிறான்.
„சீலன்! வருகிற சனிக்கிழமை பிராங்பேர்ட்டிலை நடக்கிற சர்வதேச பெண்கள் பேரணியில் கலந்து கொள்ள நானும் சுவிஸ் பெண்கள் ஐந்து பேரும் வருகிறம். பிராங்பேர்ட்டில் விட